சிரியாவில் இருந்து குறைந்தது 75 இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் லெபனானுக்கு சென்று விட்டதாகவும் வணிக விமானங்கள் மூலம் எதிர்வரும் நாட்களில் நாடு திரும்புவார்கள் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில் ஜம்மு மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த 44 யாத்ரீகர்களும் அடங்குவர்.
அவர்கள் ஷியா முஸ்லிம்களின் முக்கியமான புனித யாத்திரைத் தளமான சையிதா சைனாப்பில் சிக்கித் தவித்தனர்.
பெரும்பாலான யாத்ரீகர்கள் குணமடைய வேண்டி இந்த தளத்திற்கு பயணம் செய்கிறார்கள்.
டமாஸ்கஸில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றியமை, ஜனாதிபதி பஷர் அல் அசாத் நாட்டை விட்டு வெளியேறியதன் பின்னணியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
டமாஸ்கஸ் மற்றும் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகங்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த வெளியேற்றம், “பாதுகாப்பு நிலைமை, சிரியாவில் உள்ள இந்திய நாட்டினரின் கோரிக்கைகள் பற்றிய விவாதங்களை தொடர்ந்து நடைமுறைக்கு வந்ததாகவும் வெளிவிவகார அமைச்சு கூறியது.
இன்னும் சிரியாவில் இருக்கும் இந்தியப் பிரஜைகள் டமாஸ்கஸில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் அவசர உதவி எண் +963 993385973 (வாட்ஸ்அப்பிலும்), மேலதிக விவரங்களுக்கு hoc.damascus@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்பில் இருக்குமாறு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
வெளி நாடுகளிலுள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் அதிக முன்னுரிமை அளிப்பதாக கூறியுள்ள வெளிவிவகார அமைச்சு, சிரியா நிலைமைகளை உண்ணிப்பாக கண்காணிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) கிளர்ச்சிக் குழுவின் தலைமையிலான மின்னல் முன்னேற்றத்தை அடுத்து சிரியா ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறி ரஷ்யாவில் தஞ்சம் அடைந்தார்.
இதையடுத்து, கிளர்ச்சிப் போராளிகள் தலைநகர் டமாஸ்கஸில் போட்டியின்றி நுழைந்ததுடன், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான பஷர் அல் அசாத் குடும்பத்தின் ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வந்தனர்.