வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்கள் தங்களுக்கான மருத்துவ சிகிச்சைக்காகவும், மாணவர்கள் தங்களின் கல்வியறியை வளர்த்தெடுக்கவும் நிதியுதவிகள் தேவைப்பட்டால் நாடும் முதல் இடமாக ஜனாதிபதி நம்பிக்கை நிதியம் காணப்படுகிறது.
ஆனால், இப்படியான இந்த நிதியத்திலிருந்து கடந்த 2005 ஆம் ஆண்டு முதல், 2024 ஆம் ஆண்டுவரை இலட்சக்கணக்கிலும், கோடிக் கணக்கிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நிதி வழங்கப்பட்டுள்ளது என்றால் ஏற்றுக் கொள்ள முடியுமா?
ஆம். அவ்வாறு பாரிய நிதிகளைப் பெற்றுக் கொண்டவர்களின் பெயர் பட்டியல் இன்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் மறைந்த முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்தன 300 இலட்சம் ரூபாய் நிதியுதவியை பெற்றுக் கொண்டு முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் இன்று சபையில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ , ”எமது நாட்டிலுள்ள வறுமையானவர்களுக்கு உதவுவதற்காக 1978 ஆம் ஆண்டு ஜனாதிபதி நம்பிக்கை நிதியம் ஸ்தாபிக்கப்பட்டது.
1978 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த சட்டத்தைக் கொண்டுவரும்போது, உதவி செய்வதற்கான காரணிகளும் கூறப்பட்டுள்ளன.
அந்த வகையில், முதலாவதாக காரணியாக வறுமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க எனக் கூறப்பட்டுள்ளது.
இரண்டாவதாக கல்வியறிவை வளர்த்தெடுக்க.
மூன்றாவதாக மதங்களை வளர்த்தெடுக்க.
நான்காவது, தேசிய ரீதியாக ஏதேனும் சேவை செய்தவவர்களுக்கு உதவிகளை செய்ய என்று கூறப்பட்டுள்ளது.
இறுதியாக ஜனாதிபதியினால், அல்லது நிதியத்தினால் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு உதவி செய்ய என்று காரணம் கூறப்பட்டுள்ளது.
விசேடமாக வறுமை, கல்விக்காகத்தான் இந்த நிதியத்திடமிருந்து நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
என்னிடம் இப்போது ஒரு ஆவணம் உள்ளது. இதில், 2005 முதல் 2024 ஆண்டு வரை ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தினால் பலனடைந்தவர்களின் பெயர் பட்டியல் உள்ளது.
இதில் சிலரின் பெயர்களை நான் இங்கே வாசிக்கிறேன்.
பி. ஹரிசன்
பியசேன கமகே
சுமேதா ஜயசேன, இவருக்கு மெனராகலையில் அதிக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளன.
மனோஜ் சிறிசேன
பி.தயாரத்ன
எஸ்.சி. முத்துகுமாரன
வாசுதேவ நாணயக்கார
சரத் அமுனுகம
எஸ்.பி.நாவின்ன
ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தில் நிதியுதவிப் பெற்றுக் கொண்டவர்களின் பெயர் பட்டியலில் உள்ள சிலரது பெயர்களே இவை.
இன்னும் சிலரது பெயர்களும் உள்ளன. எனினும் இவர்களை தேடிப்பிடிப்பது சற்று கடினமாகும்.
அந்தவகையில், குருநாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜே.பி.டி.பி.கே. ஜயசேகர.
எச்.எம்.பி.என்.டி.சில்வா. இவர் யார் என்று தெரியுமா? இவர்தான் பியல் நிஸாந்த டி சில்வா.
அடுத்து எஸ்.ஏ.டி.எஸ். பிரேமஜயந்த. யார் இவர்? ஆம். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த.
ஈ.ஏ.ஐ.டி.டி.பெரேரா? இவர் மேல்மாகாணத்தின் முன்னாள் முதல்வர் எனக் கூறப்பட்டுள்ளது. இவர் யார்? இசுறு தேவப்பிரிய பெரேரா.
இன்னும் உள்ளார்கள். எஸ்.ஏ,ஜகத் குமார. 10 இலட்சம் ரூபாயை ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தின் ஊடாக பெற்றுக் கொண்டுள்ளார்.
கே.பி.எஸ். குமார சிறி, 9 இலட்சத்து 53, 430 ரூபாயை 2022 ஆம் ஆண்டு பெற்றுள்ளார்.
ஜயலத் ஜயவர்த்தன 10 இலட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டுள்ளார்.
நாமல் குணவர்த்தன 10 இலட்சம் ரூபாய், தர்ததாஸ பண்டா 10 இலட்சம் ரூபாய், விதுர விக்ரமநாயக்க 15 இலட்சம்
ரூபாய், விமலவீர திஸாநாயக்க 30 இலட்சம் ரூபாய், லக்கி ஜயவர்த்தன 16.2 இலட்சம் ரூபாய், சந்திரசேகரன் 14 இலட்சம் ரூபாய், 2014 ஆம் ஆண்டு ஜோன் அமரதுங்க 40 இலட்சம் ரூபாய், ஜோசப் மைக்கல் பெரேரா 27 இலட்சம் ரூபாய், டி.பி. ஏக்கநாயக்க 48 இலட்சம் ரூபாய்
டபிள்யு.எம்.எஸ்.பொன்சேகா 55 இலட்சம் ரூபாய், 2022 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஸவின் சட்ட ஆலோசகரான ஜயந்த வீரசிங்க 90 இலட்சம் ரூபாய்,
எலிக் அலுவிகார 22 இலட்சம் ரூபாய், ரஞ்சித் அலுவிகார 8.6 இலட்சம் ரூபாய். இந்த அலுவிகார பரம்பரையே ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தின் பணத்தில்தான் மருந்து வாங்கியுள்ளார்கள்.
இன்னும் உள்ளது. ராஜித சேனாரத்ன 100 இலட்சம் ரூபாய், கெஹலிய ரம்புக்வல்ல 110 இலட்சம் ரூபாய்…
எம்.கே.டி.எஸ். குணவர்த்தன 112 இலட்சம் ரூபாய், ரஞ்சித் சொய்சா 188 இலட்சம் ரூபாய், டி.எம்.ஜயரத்ன 300 இலட்சம் ரூபாய்…
இவை எல்லாம் ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தின் பணமாகும்.
எமது கிராமங்களில் வாழும் மக்கள், இதய நோய் சிகிச்சைக்கோ அல்லது கிட்னி பாதிப்புக்கான சிகிச்சைக்கோ ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தை நாடினால், எவ்வளவு சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்படும் என்பதை இங்கிருக்கும் அனைவரும் அறிவார்கள்.
ஒரு இலட்சம், இரண்டு இலட்சத்தை இங்கிருந்து பெற்றுக் கொள்ளவே அத்தளை சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்படும்.
ஆனால், இவர்களுக்கு எல்லாம் எந்த பிரிவின் கீழ் நிதி வழங்கப்பட்டுள்ளது?
பாவம் இவர்கள் எல்லாம் வறுமையானவர்கள்தானே. இப்படித்தான் இவர்கள் ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தை பயன்படுத்தியுள்ளார்கள்.
மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஸ, ரணில் விக்கரமசிங்க காலத்தில்தான் இந்த சம்பங்கள் நடைபெற்றுள்ளன.
இதுதொடர்பாக மக்களுக்கு தெரியாது. நாடாளுமன்றுக்கும் தெரியாது. திறைச்சேரியில் இருந்துதான் இந்த நிதி வழங்கப்படுகிறது.
2022 முதல் 2024 பிரதமர் அலுவலகத்தின் வைத்திய பிரிவின் செலவு எவ்வளவு தெரியுமா?
121 இலட்சம் ரூபாய்… அதாவது இந்த இரண்டு வருடங்களில் முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவின் வைத்திய செலவுகள்.
பிரதமர் அலுவலகத்திலிருந்து தேசிய வைத்தியசாலைக்கு எவ்வளவு தூரம் இருந்துவிடப் போகிறது? ஏன் அங்கே சென்று சிகிச்சைப் பெற முடியாதா?
தனியார் வைத்தியசாலைகள் கூட அருகில் உள்ளபோது, 121 இலட்சம் ரூபாய் செலவாகியுள்ளது.
இவ்வாறான சம்பவங்களை நிறுத்ததான், மக்கள் எமக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளார்கள்” என தெரிவித்தார்.