கனடாவின் நிதியமைச்சராக இருந்த கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் திடீரென தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்த நிலையில், புதிய நிதியமைச்சராக டொமினிக் லிபிளான்கை (Dominic LeBlanc ) அந்நாட்டின் ஜனாதிபதி ஜஸ்டின் ட்ரூடோ நியமித்துள்ளார்.
கனடாவைச் சேர்ந்த ஒவ்வொருவரும் 250 கனடா டொலர்கள் காசோலை வழங்குவதற்கான கொள்கை தொடர்பாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட்வுக்கும் இடையே கடந்த காலங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த வாரம் கருத்து தெரிவித்த ஜஸ்டின் ட்ரூடோ ‘தனது அரசில் உயர்நிலை பொருளாதார ஆலோசகராக கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் இருப்பதில் தனக்கு விருப்பம் இல்லை’ எனத் தெரிவித்திருந்தார்.
இதனால், கனடாவின் நிதியமைச்சரும், துணைப் பிரதமருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் வருடாந்திர அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, தனது பதவியை இராஜினாமா செய்தார்.
கிறிஸ்டியா ஃபிரீலேண்ட் பதவியை இராஜினாமா செய்தது, ட்ரூடோ அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இதையடுத்து, தனது நெருங்கிய வட்டாரத்தில் உள்ள டொமினிக் லிபிளான்க்கை புதிய நிதியமைச்சராக நியமித்து, பிரதமர் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.