முதலாவது லங்கா டி10 சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தசூன் ஷானக்க தலைமையிலான ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ் அணியானது சம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது லங்கா டி10 சூப்பர் லீக் தொடரானது கடந்த டிசம்பர் 11 ஆம் திகதி கண்டி, பல்லேகல மைதானத்தில் சர்வதேச வீரர்களின் பங்கு பற்றலுடன் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது.
நாட்டின் 06 பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தி (ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், நுவரெலியா, கொழும்பு, கண்டி மற்றும் காலி) ஆறு அணிகள் பங்கெடுத்த இத் தொடரின் இறுதிப் போட்டியானது நேற்று (19) மாலை நடைபெற்று.
இறுதிப் போட்டியில், தசூன் சானக்க தலைமையிலான ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ் அணியும், டேவிட் வைஸ் தலைமையிலான ஜப்னா டைட்டன்ஸ் அணிகளும் மோதின.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா டைட்டன்ஸ் அணியானது களத்தடுப்பினை மேற்கொள்ளுவதற்கு தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை பெற்றது.
அணி சார்பில் அதிகபடியாக மொஹமட் ஷாஜாத் மற்றும் ஷெவோன் டேனியல் ஆகியோர் தலா 26 ஓட்டங்களை எடுத்தனர்.
134 என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஜப்னா டைட்டன்ஸ் அணியானது, 10 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
அணி சார்பில் அதிகபடியாக டோம் ஆபெல் 27 பந்துகளில் 54 ஓட்டங்களை ஆட்டமிழக்காது எடுத்தார்.
இதனால், ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ் அணியானது 26 ஓட்டங்களினால் வெற்றி பெற்று, முதலாவது லங்கா டி10 சூப்பர் லீக் பட்டத்தை தனதாக்கியது.
போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடரின் ஆட்டநாயகனாகவும் தசூன் சானக்க தெரிவானார்.