செயற்கை நுண்ணறிவு (AI) காரணமாக பலர் வேலை இழக்க நேரிடும் என்று அடிக்கடி கூறப்படுகிறது. இதைப் பற்றி பலர் பலவிதமான கருத்துக்களைக் கூறுவதுண்டு.
இந்நிலையில் இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிரபல ஃபின்டெக் நிறுவனம் ஊழியர்களை பணியமர்த்துவதை நிறுத்தியுள்ளது.
ஊடக அறிக்கைகளின்படி, தொழில்நுட்ப நிறுவனமான கிளார்னா ஆட்சேர்ப்பை நிறுத்தியுள்ளது. மேலும், ஊழியர்கள் தங்கள் அலுவலகத்தில் செய்யும் அனைத்து வேலைகளையும் செயற்கை நுண்ணறிவால் செய்ய முடியும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இப்போது வாங்குங்கள், பின்னர் பணம் செலுத்துங்கள்” சேவைகளுக்கு பெயர் பெற்ற ஃபின்டெக் நிறுவனமான கிளார்னாவின் தலைமை நிர்வாக அதிகாரி செபஸ்டியன் சிமியாட்கோவ்ஸ்கி, இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், AI ஆனது ஒரு நிறுவனத்திற்குள் பல பொசிஷன்களை நிர்வகிக்கும் நிலையை எட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.
அவர் ஒரு வருடத்திற்கு முன்பு நிறுவனத்தில் புதிய ஊழியர்களைச் சேர்ப்பதை நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார். அதனால் அவரது நிறுவனத்தில் பணியாளர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்தது. முன்னதாக, அவரது நிறுவனத்தில் 4,500 ஊழியர்கள் இருந்தனர், ஆனால் தற்போது 3,500 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர்.
தலைமை நிர்வாக அதிகாரியின் கூற்றுப்படி, ஒவ்வொரு தொழில்நுட்ப நிறுவனத்தையும் போலவே, எங்களுக்கும் இயற்கையாகவே ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஏனெனில் பொதுவாக தொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 20 சதவீத ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் மாறுகிறார்கள். இந்நிலையில் காலியிடங்களை நிரப்புவதற்குப் பதிலாக கிளார்னா நிறுவனம் புதிய ஊழியர்களை பணியமர்த்தாமல் AI மற்றும் ஆட்டோமேஷனில் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
எனவே இந்நிறுவனம் AI இன் பயன்பாட்டை அதிகரித்து புதிய நபர்களை பணியமர்த்துவதை நிறுத்தியுள்ள நிலையில், தற்போதுள்ள ஊழியர்களுக்கான ஊதியத்தை குறைக்கப் போவதில்லை என்று கூறியுள்ளது. இது தற்போதுள்ள ஊழியர்களின் சம்பளத்தை எந்த விதத்திலும் பாதிக்காது என்று சிமியாட்கோவ்ஸ்கி கூறியுள்ளார்.
அதற்குப் பதிலாக, குறைக்கப்பட்ட பணியாளர்கள் மூலம் நிறுவனத்தில் சேமிக்கபப்டும் சம்பள பணம் ஆனது, தற்போதுள்ள ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வடிவில் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
கிளார்னா நிறுவனம் தற்போது ஒரு சில பதவிகளுக்கு மட்டுமே பணியமர்த்துகிறது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அவர் நிறுவனத்தை விரிவுபடுத்தாமல், அத்தியாவசியப் பணிகளுக்கு, குறிப்பாக பொறியியல் துறையில் மட்டும் ஆட்களை வேலைக்கு அமர்த்துகிறோம் என்று கூறியுள்ளார். இது வரும் காலங்களில் பல நிறுவனங்கள் தங்கள் அனைத்து வேலைகளையும் AI ஐ பயன்படுத்தி செய்யும் என்பதை காட்டுகிறது. அத்தகைய சூழ்நிலையில் மக்கள் வேலையின்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.