கொழும்பில் உள்ள ரோயல் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக இலங்கை உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சட்டமா அதிபர் நேற்று (19) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த உத்தரவை உயர் நீதிமன்றம் இந்த ஆண்டு தொடக்கத்தில் இரத்து செய்ததுடன், அது அரசியலமைப்பை மீறும் செயலாகும் என்றும் கூறயது.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பின்னர் நாட்டை விட்டு தப்பிச் சென்ற தேடப்படும் சந்தேக நபரை நாடு திரும்ப அழைத்து வருவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்திற்கு விளக்கமளிக்குமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்தேக நபரை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் இன்டர்போலின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
சந்தேகநபரின் வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு உயர் நீதிமன்றம் வழக்கை 2025 12 மார்ச் அன்று விசாரணைக்கு ஒத்திவைத்தது, விசாரணைகள் குறித்து நீதிமன்றத்தை புதுப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டது.
2005 ஆம் ஆண்டு இராஜகிரியவில் உள்ள ரோயல் பார்க் காண்டோமினிய வளாகத்தில் இவோன் ஜோன்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவருக்கு 2012 இல் ஆரம்பத்தில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் பின்னர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் கொலைக் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து, கொலைச் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார்.