இந்திய பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் (Bipin Rawat), அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேரின் உயிரைப் பறித்த ஹெலிகொப்டர் விபத்து “மனிதத் தவறால்” ஏற்பட்டது என்பதை இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பாதுகாப்பு நிலைக்குழு அறிக்கையின்படி,
பதின்மூன்றாவது பாதுகாப்புத் திட்ட காலத்தில் 34 விமான விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜெனரல் பிபின் ராவத்தை ஏற்றிச் சென்ற Mi-17 V5 ஹெலிகொப்டர் உட்பட 16 விபத்துக்கள் மனிதப் தவறுகளால் நிகழ்ந்தன.
ஏனைய விபத்துகள் தொழில்நுட்பக் குறைபாடு, பொருள் சேதம் மற்றும் பறவை தாக்குதல் என்பவற்றுடன் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனரல் பிபின் ராவத்தின் மரணத்திற்கு வழிவகுத்த சோகமான விபத்து 2021 டிசம்பர் 8 அன்று தமிழ்நாட்டின் குன்னூர் பகுதியில் நிகழ்ந்தது.
ஜெனரல் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் IAF Mi-17 V5 ஹெலிகொப்டரில் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரிக்கு (DSSC) செல்லும் வழியில் இருந்தனர், அங்கு அவர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் உரையாற்ற திட்டமிடப்பட்டது.
சூலூர் இந்திய விமானப்படை நிலையத்திலிருந்து முற்பகல் 11:50 மணியளவில் ஹெலிகொப்டர் புறப்பட்டது, ஆனால் அதன் இலக்கிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 12:20 மணியளவில் அது விபத்துக்குள்ளானது.
ஹெலிகாப்டர் அடர்ந்த மூடுபனியில் குறைந்த உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது பள்ளத்தாக்கில் மோதி மரங்கள் வழியாக விழுந்ததாக நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹெலிகொப்டர் தரையில் வீழ்ந்து தீப்பிடித்து எரிந்த போது, அதில் பயணித்த 14 பேரில் 13 நபர்கள் உயிரிழந்தனர்.
விபத்தில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் உயிர் தப்பினார்.