வருங்கால வைப்பு நிதி (PF) மோசடி வழக்கு தொடர்பில் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரோபின் உத்தப்பா (Robin Uthappa), சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
தனது எக்ஸ் கணக்கில் குறித்த அறிக்கையை வெளியிட்ட அவர், மோசடி தொடர்பில் சம்பந்தப்பட்ட எந்த நிறுவனத்திலும் தாம் நிர்வாகப் பங்கு வகிக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
மேலும் குறித்த நிறுவனங்களுக்கு கடன் உதவிகள் மூலம் தான் அளித்த நிதி பங்களிப்பு காரணமாக, 2018-19 இல் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதாகவும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் குறிப்பிட்டார்.
மேலும், ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் வர்ணனையாளர் போன்ற எனது பணிச் சுமையினால், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிறுவனங்களில் செயற்பாடுகளில் தலையிடுவதற்கு எனக்கு நேரமும் நிபுணத்துவமும் இல்லை.
உண்மையில், நான் நிதியளித்த எந்த நிறுவனங்களிலும் இன்றுவரை நான் நிர்வாகப் பாத்திரத்தை வகிக்கவில்லை என்றும் உத்தப்பா தெளிவுபடுத்தியுள்ளார்.
வருங்கால வைப்பு நிதி விடயத்தில் ஊழியர்களையும் அரசாங்கத்தையும் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பில் முன்னாள் இந்திய வீரர் ரோபின் உத்தப்பாவுக்கு (Robin Uthappa) எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்டாரஸ் லைஃப்ஸ்டைல் பிராண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் (Centaurus Lifestyle Brands Private Limited) பணிப்பாளரான, உத்தப்பா, சம்பளத்தில் இருந்து வருங்கால வைப்பு நிதி பங்களிப்பைக் கழிப்பதன் மூலம் ஊழியர்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
குறித்த நிதியானது ஊழியர் கணக்கில் வைப்பிலிடப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, வருங்கால வைப்பு நிதியின் பிராந்திய ஆணையர் சடாக்சரி கோபால், கர்நாடக மாநிலம் புலகேசிநகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
அதில், குறித்த நிதி மோசடியில் ஈடுபட்ட ரோபின் உத்தப்பா, ஊழியர்களிடம் பிடித்தம் செய்த 23 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாயை செலுத்தவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
முறைப்பாட்டின் பேரில் உத்தப்பாவுக்கு எதிராக கடந்த 04 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர் டுபாயில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் மோசடி செய்த பணத்தை முழுமையாக செலுத்த கெடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.