மது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக கைது செய்யப்படும் நபர்களின் சாரதி அனுமதி உரிமத்தை 12 மாதங்களுக்கு இடைநிறுத்த நீதிமன்றின் அனுமதியை கோருவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே, மது போதையில் வாகனம் செலுத்துவதை தவிர்க்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதவேளை, நேற்றுக் காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்தியமைக்காக கைதான 395 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், பொலிஸாரின் விசேட கண்காணிப்பு சோதனையின் போது, கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 50 சாரதிகளும், அதிவேகமாக வாகனம் செலுத்திய 120 பேரும், போக்குவரத்து விதிகளை மீறிய 1262 பேரும், சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான குற்றங்களுக்காக 682 பேரும், மற்ற போக்குவரத்து விதிகளை மீறிய 5441 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் மொத்தம் 7950 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் டிசம்பர் 20 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.