இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியை முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith) வழிநடத்தவுள்ளார்.
ஜனவரி 29 ஆம் திகதி தொடங்கும் இந்த தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட டெஸ்ட் அணியை கிரிக்கெட் அவுஸ்திரேலியா வியாழக்கிழமை (09) அறிவித்துள்ளது.
அதில், ஸ்டீவ் ஸ்மித் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமான அவுஸ்திரேலிய அணித் தலைவர் பேட் கம்மின்ஸ், தனது இரண்டாவது குழந்தையின் பிறப்புக்காக விடுமுறையில் உள்ள நிலையில், ஸ்மித்துக்கு இலங்கையுடனான தொடருக்காக அணியை வழி நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
35 வயதான ஸ்மித், 2018 ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஈடுபட்டதைத் தொடர்ந்து தலைவர் பதவியில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டார்.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜனவரி 29 ஆம் திகதியும் இரண்டாவது போட்டி பெப்ரவரி 06 ஆம் திகதியும் காலியில் ஆரம்பமாகும்.
இவ்விரு போட்டிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-2025 சுழற்சியின் ஒரு பகுதியாக இருந்தாலும், அவுஸ்திரேலியா (63.73% புள்ளிகள்) மற்றும் தென்னாப்பிரிக்கா (69.44% புள்ளிகள்) அணிகள் ஏற்கனவே இறுதிப் போட்டியில் விளையாடுவதை உறுதி செய்துள்ளன.
அவுஸ்திரேலியா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிண்ணத்தை வெற்றி கொள்வதற்காக எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு லொர்ட்ஸில் தென்னாப்பரிக்காவை எதிர்கொள்வார்கள்.
இலங்கையுடனான தொடருக்கான அவுஸ்திரேலிய அணி
ஸ்டீவ் ஸ்மித் (தலைவர்), சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனோலி, டிராவிஸ் ஹெட் (உப தலைவர்), ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மாட் குஹ்னேமன், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், நாதன் மெக்ஸ்வீனி, டாட் மர்பி, மிட்செல் ஸ்டார்க் மற்றும் பியூ வெப்ஸ்டர்.