அல்-காதர் அறக்கட்டளை தொடர்பான ஊழல் வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ராம் கானுக்கு அந் நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (17) 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
மேலும், குறித்த வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரரின் மனைவி புஷ்ரா பீபிக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தானிய செய்திச் சேவையான ARY நியூஸ் தெரிவித்துள்ளது.
இது தவிர இம்ரான் கானுக்கு 1 மில்லியன் பாகிஸ்தான் ரூபாவும் அவரது மனைவிக்கு 500,000 பாகிஸ்தான் ரூபாவும் நீதிமன்றம் அபராதமாக விதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நான்காவது பெரிய வழக்கு இதுவாகும்.
கடந்த 2023 ஆகஸ்ட் முதல் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானுக்கு, ராவல்பிண்டியின் காரிஸன் நகரத்தில் உள்ள சிறையில் ஊழல் எதிர்ப்பு நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
பல்வேறு காரணங்களால் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பை, கடந்த ஜனவரி 13 ஆம் திகதி ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி நசீர் ஜாவேத் ராணா அறிவித்தார்.
அடிலா சிறையில் அமைக்கப்பட்ட தற்காலிக நீதிமன்ற தொகுதியில் வைத்து நீதிவான் தீர்ப்பை அறிவித்தார்.
72 வயதான இம்ரான் கான், 50 வயதான புஷ்ரா பீபி மற்றும் மேலும் ஆறு பேர் மீது தேசிய பொறுப்புக்கூறல் பணியகம் (NAB) 2023 டிசம்பரில் குற்றச்சாட்டு தொடர்பில் வழக்குப் பதிவு செய்தது.
அவர்கள் நாட்டிற்கு 190 மில்லியன் பவுண்டுகள் (50 பில்லியன் பாகிஸ்தான் ரூபா) இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டினர்.