ஹெரோயின் மற்றும் 02 துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் மாத்தறை உப பிரிவு அதிகாரிகளால் நேற்று 17.01.2025 பொக்குனுஹென பிரதேசத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இலங்கை பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் 08 கிராம் மற்றும் 900 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட “12 போர” ரக துப்பாக்கி மற்றும் 02 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொக்குனுஹென பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என்றும் இச்சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தெரியவந்த தகவலின் படி , வடசிந்துவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போது, அந்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த “T56” ரக துப்பாக்கி மற்றும் 60 தோட்டாக்களுடன் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 24 வயதுடைய வெவஹமந்துவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இந்த T56 துப்பாக்கியை மறைத்து வைப்பதற்காக மேற்படி முதலாவது சந்தேகநபர் அவருக்கு வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மாத்தறை பொலிஸார் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரியவந்துள்ளது.