2024 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் கிரிக்கெட் அணியை ஐசிசி வெள்ளிக்கிழமை (24) வெளியிட்டது.
கடந்த ஆண்டு 50 ஓவர் வடிவ கிரிக்கெட்டில், அவர்களின் செயல்திறனுக்காக உலகெங்கிலும் உள்ள சில சிறந்த வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் ஒருநாள் அணியின் தலைவராக இலங்கையின் சரித் அசலங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு அவர் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 605 ஓட்டங்களை எடுத்தார், மேலும் ஒரு சதம் மற்றும் நான்கு அரை சதங்களையும் அடித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான இந்த ஒருநாள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பாகிஸ்தானின் சைம் அயூப் மற்றும் ஆப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
சாய்ம் அயூப் 9 போட்டிகளில் 3 சதங்கள் மற்றும் ஒரு சதம் என்ற சிறந்த துடுப்பாட்டத்துடன் 515 ஓட்டங்களை எடுத்தார்.
மறுபுறம் குர்பாஸ், 11 ஒருநாள் போட்டிகளில் 3 சதங்கள் மற்றும் 2 அரைசதங்களுடன் 531 ஓட்டங்களை எடுத்தார்.
ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் 10 ஆவது இடத்தில் இருக்கும் பத்தும் நிஸ்ஸங்க மூன்றாம் ஆம் இடத்தில் களமிறங்கும் வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு அவர் 12 ஒருநாள் போட்டிகளில் 210 அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையுடன் 106.40 ஸ்ட்ரைக் ரேட்டில் மொத்தமாக 694 ஓட்டங்களை குவித்தார்.
அவரைத் தொடர்ந்து அவரது சக வீரர் குசல் மெண்டிஸ் நான்காவது துடுப்பாட்ட வீரராக பெயரிடப்பட்டுள்ளதுடன், விக்கெட் காப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
குசல் மெண்டிஸ் 17 ஒருநாள் போட்டிகளில் 143 அதிகபட்ச ஓட்டத்துடன் 53 ஸ்ட்ரைக் ரேட்டில் 742 ஓட்டங்களை எடுத்தார்.
இந்த அணியில் மேற்கிந்தியத்தீவுகள் சார்பில் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் மாத்திரம் பெயரிடப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஒன்பது ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர் 113 அதிகபடியான ஓட்டத்துடன் 106.20 ஸ்ட்ரைக் ரேட்டில் 425 ஓட்டங்களை பெற்றார்.
அஸ்மத்துல்லா உமர்சாய் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள சகலதுறை வீரர் ஆவார்.
உமர்சாய் கடந்த ஆண்டு 12 போட்டிகளில் 149 அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையுடன் 417 ஓட்டங்களை எடுத்தார்.
பந்து வீச்சில் 4/18 என்ற சிறந்த செயல்திறனுடன் 17 விக்கெட்டுகளை எடுத்தார்.
இவர் தவிர அடுத்த சகலதுறை வீரராக இலங்கை அணியின் வனிந்து ஹசரங்கவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஹசரங்க கடந்த ஆண்டு 10 போட்டிகளில் 7/19 என்ற சிறந்த செயல்திறனுடன் 26 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதேநேரம், 2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி அணியின் அடுத்த சுழற்பந்து வீச்சாளராக ஆப்கானிஸ்தானின் அல்லா கசன்பரும் இடம்பிடித்துள்ளார்.
இவர் கடந்த ஆண்டு 11 ஒருநாள் போட்டிகளில் 6/26 என்ற சிறந்த செயல்திறனுடன் மொத்தமாக 21 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இவர் தவிர அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுஃப் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
அஃப்ரிடி 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4/47 என்ற சிறப்பான பந்து வீச்சுடன் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மறுபுறம் ஹரிஸ், 6 ஒருநாள் போட்டிகளில் 5/29 என்ற சிறந்த செயல்திறனுடன் 13 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
இதேவேளை, 2024 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் ஒருநாள் அணியில் எந்த இந்திய, இங்கிலாந்து, அவுஸ்திரேலிய மற்றும் நியூஸிலாந்து ஆகிய முன்னணி அணிகளின் எந்த வீரர்களும் தேர்வு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.