இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சொகுசு பேரூந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் ஆன்மீக தலங்களுக்கு சுமார் 48 யாத்தரீகர்களுடன் பயணித்திருந்த பேரூந்தொன்று இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
டாங் மாவட்டத்தின் மலைப்பகுதியில் குறித்த பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் ஏனையவர்கள் சிறுகாயமடைந்துள்ள நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் பலரின் கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இவ் விபத்தில் மத்திய பிரதேஷ் குணா சிவபுரி அசோக் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஐவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.