தாய்லாந்து உபோன் இராஜதானியின் பிரதான பௌத்த தேரர் உபோன் பிராகா வஜ்ஜிரகூன் தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் அடங்கிய தூதுக்குழுவினர் கடந்த 05 ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்தனர்.
இதன்போது சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதிஹினிதும சுனில் செனெவி, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனத்தீர, நாடாளுமன்ற சட்டவாக்கத் திணைக்களத்தின் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
தாய்லாந்து மற்றும் இலங்கைக்கிடையில் பௌத்த தொடர்புகளை வலுப்படுத்துவது தொடர்பான முன்மொழிவை தெரணியகல வேரப்பல்ல ஸ்ரீ அபிநவாராம புராண விகாரையின் விஹாராதிபதி அவிஸ்ஸாவேல்லே வக ஸ்ரீ வஜ்ஜிரவங்ஷ தேரர் இங்கு முன்வைத்தார். அதற்கமைய, இலங்கையில் 25 பிக்கு மாணவர்களுக்கு 125 இலட்சம் ரூபாய் பெறுமதியான புலமைப்பரிசில் வழங்குதல், உலக பௌத்த நிலையத்தை இலங்கையில் அமைத்தல், இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு தாய்லாந்துப் பிரஜைகளை இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ள வைத்தல், இராஜதந்திர ரீதியாக இந்நாட்டு அரசங்கத்தின் தலையீட்டில் தாய்லாந்தில் இவ்வாண்டில் வெசாக் பண்டிகையை நடத்துதல் ஆகிய முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.
இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர், பௌத்தத்தின் உண்மையான அர்த்தத்தை உலகறியச்செய்ய எடுத்துள்ள இந்த முயற்சிக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன், புத்தரின் போதனைகளின் மதிப்புகளைச் சுட்டிக்காட்டிய கௌரவ சபாநாயகர், முன்வைக்கப்பட்ட திட்டங்கள் குறித்து மகாநாயக்க தேரர்களுக்கும் அறிவுறுத்தி அவர்களின் ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் அடுத்த நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த, புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் கௌரவ அமைச்சர் கலாநிதிஹினிதும சுனில் செனெவி, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை நினைவு கூர்ந்ததுடன், பௌத்த மதத்தை வளர்ப்பதற்கு வழங்கும் பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்தார். அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்தத் தேவையான இராஜதந்திர ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இங்கு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் கட்டமைக்கப்பட்டுள்ள பௌத்த மத உறவுகள் மூலம் இரு நாட்டு மக்களும் அடையக்கூடிய சிறந்த வாழ்க்கையை நினைவு கூர்ந்தார்.
இதன்போது உபோன் இராஜதானியின் பிரதான பௌத்த தேரர்கள் உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாடாளுமன்றத்தையும் பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் தாய்லாந்து பௌத்த கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் ஸ்ரீ சோபித் வட்டய எம் ஃபா திருகான்பாக் போங் தேரர் உள்ளிட்ட தேரர்களும், அந்நாட்டில் தற்காலிக துறவறத்தில் இணைந்த பெண்கள் மற்றும் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்கள பொது சேவைகள் பிரிவின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.