டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியை பிடித்துள்ள நிலையில், பா.ஜ.கவின் வெற்றிக்கு பிரதான காரணம் பிரதமர் மோடியின் நலத்திட்டங்களே என பா.ஜ.க தேசியக்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கோவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்த அவர் பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள் மக்களின் மனதை வென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ளது எனத் தெரிவித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று வந்த போதிலும், சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளதாகவும், பாஜக தற்போது 48 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆம் ஆத்மி கட்சி ஆரம்ப கட்டத்தில் மிகவும் எளிமையாக இருந்தவர்கள் எனவும், இன்று ஊழல் செய்து ஆடம்பரமாக உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டிற்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வந்த காங்கிரஸ் கட்சி தற்போது துடைத்து எறியப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் டெல்லியில் உள்ள தமிழர் பகுதிகளில் தானும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் சென்ற போது அங்குள்ள தமிழர்கள் மத்தியிலும், பாஜகவிற்கு ஆதரவு அதிகரித்துள்ளது என்பதை நேரில் பார்க்க முடிந்தது எனவும் இடைத்தேர்தலில் பொதுவாக ஆளும்கட்சி தான் வெற்றி பெறும் எனவும், ஆனால் பணத்தை வழங்கி திமுக வெற்றி பெற்றுள்ளது எனவும் இதனை பெரும் வெற்றியாக திமுக கருத முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.