இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோகித் சர்மாவின் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகின்றது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி நேற்று கட்டாக்கில் நடைபெற்றிருந்தது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக Joe Root அதிகபட்சமாக 69 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
இந்திய அணி தரப்பில் பந்து வீச்சில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது அறிமுக ஒருநாள் போட்டியில் களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி 1 விக்கெட் வீழ்த்தியிருந்தார். 305 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதல் ரோகித் மற்றும் கில் ஆகியோர் அதிரடியாக துடுப்பெடுத்தாடியிருந்தனர்.
இறுதியில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 76 பந்துகளில் சதமடித்திருந்ததுடன் 119 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 44.3 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 308 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.