நாட்டின் எதிர்க்கட்சிகள் இந்து மதத்தை தொடர்ந்தும் தாக்குவதாகவும், அவர்கள் சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (23) குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் தற்போது நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்வு குறித்து பல எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில் இந்தியப் பிரதமர் மோடி இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி மற்றும் பிரயாக்ராஜில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை அதிகாரிகள் மறைப்பதாக குற்றம்சாட்டினார்.
அதேநேரம், மகா கும்பமேளா நிகழ்வினையும் கடுமையாக சாடிப் பேசியிருந்தார்.
இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில் இன்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், நம்பிக்கை மற்றும் கலாச்சார நடைமுறைகளை கேலி செய்யும் அரசியல்வாதிகளை விமர்சித்தார்.
அவர்கள் இந்தியாவின் மத பாரம்பரியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் “அடிமை மனப்பான்மை” கொண்டவர்கள் என்று வர்ணித்தார்.
மேலும், ஆலயங்கள், மரபுகள் மற்றும் திருவிழாக்களை குறிவைப்பவர்களை கடுமையாக சாடிய பிரதமர், சமூக ஒற்றுமையை சீர்குலைப்பதே அவர்களின் செயல்திட்டம் என்றும் வலியுறுத்தினார்.