புனித ரமலான் நோன்பு காலம் இன்று (02) முதல் ஆரம்பமாகின்றது. அதன்படி, இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (01) இரவு புதிய பிறை தென்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய ஒருங்கிணைப்பு பிரதியமைச்சர் மொஹமட் முனீர் தெரிவித்தார்.
புனித ரமலான் நோன்பு என்பது இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் கடைபிடிக்கப்படும் ஒரு மத நடைமுறையாகும்.
ரமலான் நோன்பு என்பது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. கலிமா, தொழுகை, ஜகாத் மற்றும் ஹஜ் ஆகியவையே மீதமுள்ள 4 கடமைகள் ஆகும்.
பொதுவாக 30 நாட்களுக்கு கடைபிடிக்கப்படும் இந்த நோன்புகளில், விடியற்காலை (ஸஹர்) முதல் சூரிய அஸ்தமனம் (இஃப்தார்) வரை முஸ்லிம்கள் சாப்பிடவோ, எதையும் குடிக்கவோ மாட்டார்கள். இஸ்லாத்தில் பக்தி மற்றும் சுய ஒழுக்கத்தின் செயலாக இது பார்க்கப்படுகிறது.
ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள், விடியலுக்கு முன்பு அதிகாலையிலேயே காலை உணவை உண்பர். இது, ஸஹர் என அறியப்படுகிறது. அதன்பின், சூரியன் மறைந்ததும் மாலை நோன்பை முடிப்பதற்கு முன்பு வரை எதையும் உண்ண மாட்டார்கள், தண்ணீர் உட்பட எதையும் அருந்த மாட்டார்கள். இது இஃப்தார் எனப்படுகிறது.
இந்த இரண்டிற்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் உள்ளது. அதற்குள் ஸஹர் உணவை முடித்து, நோன்பைத் தொடங்க வேண்டும் மற்றும் மாலையில் இஃப்தார் உணவை உண்டு, நோன்பை முடிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.