இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் ஒன்பதாவது மாமே ரமலான். உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் நோன்பிருந்து, இறைவணக்கங்களில் ஈடுபட்டு, அவரிடம் பிரார்த்திக்கும் ஒரு புனிதமான காலமாகும்.
2025 ஆம் ஆண்டில், அதாவது இஸ்லாமிய சந்திர வருட அடிப்படையில், ஹிஜ்ரி 1446 ஆம் வருட ரமலான் மாத பிறை கண்டதைத் தொடர்ந்து நோன்பு ஆரம்பமாகும்.
ரமலான் என்றால் என்ன?
ரமலான் மாதத்தில், முஸ்லிம்கள் விடியலுக்கும் சூரிய அஸ்தமனத்திற்கும் இடையில் உணவு உண்ணவோ, நீர் அருந்தவோ மாட்டார்கள். இது நோன்பு எனப்படும்.
ரமலான் மாதத்தை பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறார் :
”ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்” அல்குர்ஆன் 2 ஆவது அத்தியாயம்:183 ஆவது வசனம்
ரமலான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால், இந்த புனிதமிக்க ரமலான் மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டதால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது.
ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் இம்மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது. நன்மை, தீமைகளை பிரித்து நேர்வழி எது என்பதை பிரித்து காட்டும் அருள் மறை திருகுர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் இரவில் அருளப்பட்டது. அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : அஹமது, இப்னு கதீர்
பல முஸ்லிம்கள் ரமலானில் முடிந்தவரை குர்ஆனைப் படிக்க முயற்சிப்பார்கள்.
ரமலான் என்பது ஆன்மீக சிந்தனை, பிரார்த்தனை, நல்ல செயல்களைச் செய்தல் மற்றும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தை செலவிடுவதற்கான நேரமாகும்.
இதனாலேயே நோன்பு கடமையான ரமலான் மாதத்திற்குப் “பொறுமையின் மாதம்’ என்ற சிறப்பு பெயரும் உண்டு. “நோன்பு, பொறுமையின் சரி பாதி’ என்று சாந்த நபி (ஸல்) அவர்கள் சாற்றியதைத் திர்மிதீ, அஹமது முதலிய நூல்களில் காணலாம்.
பொதுவாக, மக்கள் தங்கள் சமூகங்களுடன் இணைவதற்கும், உதவி தேவைப்படும் நபர்களை அணுகுவதற்கும் சிறப்பான முயற்சியை மேற்கொள்வார்கள்.
2025 இல் ரமலான் எப்போது தொடங்கி முடிவடைகிறது?
ரமலான் மாதம் ஆரம்பித்து 29 ஆம் நாளில் ஷவ்வால் மாத பிறை பார்க்கப்படும். பிறை தென்பட்டால் மறுநாள் பெருநாள் கொண்டாடுவர். பிறை தென்படவில்லையெனில் ரமலான் மாதத்தை 30 நாட்களாக பூர்த்திசெய்துவிட்டு பின்னர் நோன்புப் பெருநாளை முஸ்லிம்கள் கொண்டாடுவர்.
அதன்படி, மார்ச் 01 ஆம் திகதி மாலை பிறை தென்பட்டதை தொடர்ந்து, மார்ச் 02 ஆம் திகதி நேற்று முதல் ரமலான் மாத நோன்பு காலம் ஆரம்பமானது.
உலகலவில் வெவ்வேறு நாடுகளிலும் இவ்வாறு பிறை பார்த்து அதற்கேற்ற வகையில் நோன்பை ஆரம்பித்து 29 அல்லது 30 நாட்களின் பின்னர் பெருநாளை கொண்டாடுவர்.
ஒவ்வொரு வருடமும் ரமலான் ஆரம்பம் ஏன் மாறுகிறது?
ரமலான் இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் திகதி மாறுகிறது, ஏனெனில் இஸ்லாம் சந்திர நாட்காட்டியை (சந்திரனின் சுழற்சிகளின் அடிப்படையில்) பயன்படுத்துகிறது, எனவே இது கிரிகோரியன் அல்லது சூரிய நாட்காட்டியில் நிலையான திகதி அல்ல.
இஃப்தார் என்றால் என்ன, அது ஏன் முக்கியமானது?
ரமலானின் போது, அதிகாலையில் ஒரு உணவு (சுஹூர் என்று அழைக்கப்படுகிறது) மற்றும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மற்றொரு உணவு (இப்தார் என அழைக்கப்படுகிறது) பொதுவாக உள்ளது.
உண்ணாமல் தீய செயல்களில் ஈடுபடாமல் பசித்து தாகித்திருந்து சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் முஸ்லிம்கள் தங்கள் நோன்பை துறந்து இப்தார் சாப்பிடுவார்கள்.
யாருக்கு பேரீச்சம் பழம் கிடைக்கிறதோ அவர் அதன் மூலம் நோன்பு துறக்கட்டும்! கிடைக்காதவர்கள் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கட்டும்; ஏனெனில் அது தூய்மையானதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: திர்மிதீ
குழந்தைகள் ரமலான் நோன்பில் பங்கேற்கலாமா?
ரமலானில் அனைவரும் நோன்பு நோற்பதில்லை – உடல் தகுதி மற்றும் ஆரோக்கியம் உள்ளவர்களுக்கு மட்டுமே நோன்பு கடமையாகிறது.
சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
முஸ்லிம் சிறுவர்கள் பொதுவாக பருவமடைவதற்குள் நோன்பு நோற்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக – ஃபித்யாவாக – ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது – ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184
ரமலான் வேறு எப்படி அனுசரிக்கப்படுகிறது?
ரமலான் முழுவதும், பெரியவர்கள் தொண்டு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏழை மக்களுக்கு ஸதகா செய்ய வேண்டும். அதிகதிகமாக தான தர்மங்களில் ஈடுபட வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது.
ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் பல நல்ல அமல்கள் செய்யப்படுகின்றன. இரவு நேர விசேட தொழுகைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
முஸ்லிம்கள் அதிகதிகமாக குர்ஆன் ஓதுவதிலும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதிலும் ஈடுபடுவார்கள்.