2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் கோரப்பட்டதையடுத்து, முதற்கட்ட பணிகளை ஆரம்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளை கொழும்புக்கு அழைக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இக்கலந்துரையாடலை எதிர்வரும் சனிக்கிழமை (08) நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் நாளை (06) நடைபெறும் தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணையம் கூடுவது இதுவே முதல் முறை.
தேர்தல் தொடர்பான திட்டமிடல் மற்றும் அது தொடர்பாக எழும் பிரச்சினைகள் குறித்து இதன்போது ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.