லாகூரில் இன்று (05) நடைபெறும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தானில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதல் பாதுகாப்பு கவலைகளை அதிகரித்துள்ளது.
கடாபி மைதானத்தில் நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து போட்டி அட்டவணையில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.
எனினும், அண்மைய தாக்குதல் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.
கடந்த மாத இறுதியில், பாகிஸ்தானின் வெவ்வேறு பகுதிகளில் நடந்த இரண்டு தனித்தனி குண்டுவெடிப்புகளில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
இது அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சங்களை மேலும் உயர்த்தியுள்ளது.
இந்த நிலையில் வடமேற்கு பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை (04) மாலை ஒரு பாதுகாப்பு நிலையத்தின் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட இரண்டு வாகனங்கள் தற்கொலை தாக்குதல் நடத்தியுள்ளன.
இதில் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 12 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானிய காவல்துறை மற்றும் மீட்பு சேவைகள் தெரிவித்துள்ளன.
ரமலான் நோன்பை முடித்துவிட்டு உள்ளூர் சந்தைகள் நிரம்பி வழிந்த சிறிது நேரத்திலேயே நடத்தப்பட்ட தாக்குதலினால், அருகிலுள்ள மசூதியின் கூரை இடிந்து விழுந்தாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவித்துள்ளன.
தற்கொலை தாக்குதலுக்குப் பின்னர், மேலும் பல தீவிரவாதிகள் இராணுவ நிலையத்திற்குள் நுழைய முயன்றதாகவும், ஆனால் அந்த முயற்சி பாதுகாப்புப் படையினரால் முறியடிக்கப்பட்டது என்றும் பாகிஸ்தானிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.
படையினரின் பதில் தாக்குதலில் ஆறு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டும் உள்ளனர்.
ஒட்டுமொத்தமாக இந்த தாக்குதலில் 12 பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் பன்னு மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் மொஹமட் நௌமன் தெரிவித்தார்.
அவர்கள் அனைவரும் இடிந்து விழுந்த கட்டிடங்கள் மற்றும் சுவர்களில் சிக்கிய பொதுமக்கள் என்றும் அவர் கூறினார்.
கொல்லப்பட்டவர்களில் குறைந்தது ஏழு குழந்தைகளும் அடங்குவர் என்று மருத்துவமனை பட்டியல் காட்டுகிறது.
இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கிக் கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையலி, பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் உள்ளூர் மீட்பு 1122 சேவை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் இந்த தாக்குதலைக் கண்டித்துடன், “பாகிஸ்தானின் எதிரிகளின் தீய இலட்சியங்கள் ஒருபோதும் வெற்றிபெற அனுமதிக்கப்படாது” என்றார்.
தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) என்ற தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரிகள், பாதுகாவலர்களின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்ட பின்னர் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட இரண்டு வாகனங்களை வளாகத்தின் சுற்றளவுக்குள் செலுத்திச் சென்று, பாரிய வெடிப்புகளை ஏற்படுத்தியதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.