இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த எட்டு நாட்களாக முன்னெடுத்த தங்கள் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை (04) தங்கச்சிமடத்தில் வாபஸ் பெற்றனர்.
இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி இழுவை படகுகளுக்கான இழப்பீட்டை 6 இலட்சத்திலிருந்து 8 இலட்சமாக இந்திய ரூபாவாக உயர்த்தியும், இலங்கை காவலில் உள்ள மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தினசரி உதவித்தொகையை 350 ரூபாலிருந்து 500 ரூபாவாகவும் மாநில அரசு அறிவித்த ஒரு நாள் கழித்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த மீனவர் தலைவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இருப்பினும், தங்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படாவிட்டால், புதிய பாம்பன் ரயில் பாலத்தின் திறப்பு விழாவின் போது போராட்டம் நடத்துவோம் என்று மீனவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரையும் அவர்களது ஐந்து இழுவை படகுகளையும் முந்தைய நாள் கைது செய்ததை அடுத்து, பெப்ரவரி 24 முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பெப்ரவரி 28 அன்று, அவர்கள் போராட்டத்தை தங்கச்சிமடத்திற்கு மாற்றினர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒரு நிகழ்விற்காக ராமேஸ்வரம் செல்லும் வழியில், சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களைச் சந்தித்து, மத்திய அரசிடம் அவர்களின் பிரச்சினையை எடுத்துச் செல்வதாக உறுதியளித்தமையும் குறிப்பிடத்தக்கது.