2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய அணியின் தற்காலிகத் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
எனினும், இரண்டு முறை ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வென்ற அணியில் பங்கெடுத்தவர் அவுஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவார்.
ஆனால், செவ்வாயன்று நடந்த சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியாவிடம் அவரது அணி பெற்ற குறுகிய தோல்வி, அவர் தனது நாட்டிற்காக விளையாடும் கடைசி 50 ஓவர் போட்டியாகும்.
தனது முடிவு தொடர்பில் ஸ்மித், ஒருநாள் போட்டிகளில் புதிய வீரர்கள் முன்னேற இதுவே சரியான நேரம் என்று கூறினார்.
அவுஸ்திரேலியாவுக்காக 170 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஸ்மித், 43.28 சராசரியில் 5800 ஓட்டங்களை எடுத்தார்.
அதில் 12 சதங்கள் மற்றும் 35 அரை சதங்கள் அடங்கும்.
அதே நேரத்தில் பந்து வீச்சில் 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
2015 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணியின் உறுப்பினராகவும் அவர் இருந்தார்.
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய தேர்வுக் குழு தலைவருமான ஜார்ஜ் பெய்லி, ஸ்மித்தின் ஓய்வு முடிவை கிரிக்கெட் அவுஸ்திரேலியாவில் உள்ள அனைவரும் முழுமையாக ஆதரித்ததாகக் கூறினார்.