முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேசபந்து தென்னகோன் முக்கிய அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று தெரிவித்துள்ளார்.
தேசபந்து தென்னகோனை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த மாதம் 28ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தது.
2023 டிசம்பர் 31 அன்று மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணையின் பிரகாரம் இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 11 நாட்கள் கடந்துள்ள போதிலும் அவர் இதுவரையில் கைது செய்யப்படாத நிலையில் இவ்வாறு ஆறு பொலிஸ் குழுக்கள் தேடுதல் நடவடிக்கை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மேலும் தேசபந்து தென்னகோன் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
நீதிமன்றத்தை தவிர்க்கும் பிடியாணைதாரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல நேற்று தெரிவித்தார். சட்டத்தை செயல்படுத்துவதற்கு தரவரிசை ஒரு பொருட்டல்ல என்றும் பிரதி அமைசச்ர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.