மாணவர்களை கட்டாயப்படுத்தி மண்டியிடச் செய்து தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட தனியார் கல்வி வகுப்பின் ஆசிரியர் ஒருவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய ஆசிரியரை நேற்று (11) விசாரணைக்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை முன் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டது.
எனினும், அவர் அந்த அறிவிப்பை புறக்கணித்து ஆஜராகத் தவறிவிட்டதாக NCPA தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இந்த விவகாரம் நீதிமன்றுக்கு அறிவிக்பப்ட்ட நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் கல்வி ஆசிரியருக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடை பிறப்பிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக பலர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இதன் விளைவாக, சந்தேக நபர் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக NCPA குறிப்பிட்டுள்ளது.
தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர், ஒரு ஆண் மாணவனை முழு வகுப்பு முன்பும் மண்டியிடச் செய்ததையும், மற்றொரு மாணவியை மண்டியிட்ட மாணவனை பிரம்பால் தாக்கச் சொன்னதையும் காட்டும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது.
மாணவர்களை அவர் தாக்கும் பல வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவலாக வைரல் ஆகியுள்ளன.