ஆண்கள் டெஸ்ட் கிரிக்கெட்டின் 150 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், 2027 மார்ச் மாதம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெறும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி, இளஞ்சிவப்பு பந்து பகல்-இரவு போட்டியாக இருக்கும் என்று கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
1877 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 150 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 2027 மார்ச் 11-15 ஆம் திகதிகளில் இந்தப் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) நடைபெறும் முதல் ஆண்களுக்கான இளஞ்சிவப்பு பந்து மோதல் இதுவாகும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் பெண்கள் ஆஷஸ் தொடரில் அவுஸ்திரேலியா அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை மைதானத்தில் விளையாடியது.
MCG மைதானத்தில் 1877 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியும், 1977 ஆம் ஆண்டு நூற்றாண்டு டெஸ்ட் போட்டியும் நடைபெற்றன.
இரண்டிலும் அவுஸ்திரேலியா 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதேவேளை, இந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடவுள்ளது.
இந்த தொடர் நவம்பர் மாதம் பெர்த்தில் தொடங்குகிறது.