பான் இந்திய நட்சத்திரமாக ஜொலித்து வரும் மாதவன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டெஸ்ட்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏரீனா’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான வரிகள் அடங்கிய கானொளியும் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் சசி காந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இத் திரைப்படத்தில்; ஆர். மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளதுடன் திரைப்படத்திற்கு பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைத்திருக்கிறார்.
இந்திய துடுப்பாட்ட வீரர்களின் வாழ்வியலையும், துடுப்பாட்டத்தையும் மையப்படுத்திய இந்த திரைப்படத்தை வை நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகாந்த் தயாரித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படம் நெட்பிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதியன்று நேரடியாக வெளியாகவுள்ளது.
இந்த தருணத்தில் இப்படத்தில் இடம்பெற்ற ‘இட்ஸ் நவ் ஆர் நெவர் கிளாடியேட்டர் இன் தி பாட்டில் ஜோன்..’ எனத் தொடங்கும் ஆங்கில மொழி சொற்கள் அதிகமாக இடம் பிடித்திருக்கும் முதல் பாடலும், பாடலுக்கான வரிகள் அடங்கிய கானொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலில் ‘முயற்சி செய் வென்று வா வீரா’ என ஐந்து சொற்கள் மட்டும்தான் தமிழில் இருக்கிறன.
பிரபல றாப் இசை பாடகரான யோகி பி. இந்த பாடலை எழுதி பாடியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.