கேதார்நாத் ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று உத்தரகண்டின் பாரதிய ஜனதாக் கட்சியின் சட்டமான்ற உறுப்பினர் ஆஷா நௌடியல் (Asha Nautiyal) கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்துக்கள் அல்லாத சிலர் மத தலத்தின் புனிதத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சிப்பதாக கேதார்நாத் சட்டமான உறுப்பினர் குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பாக, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் குடியிருப்பாளர்களுடன் பொறுப்பு அமைச்சர் சவுரப் பகுகுணா அண்மையில் ஒரு கூட்டம் நடத்தியதாகவும் நௌடியல் குறிப்பிட்டார்.
இதன் போது சில பங்கேற்பாளர்கள், இந்து அல்லாத நபர்கள் கேதார்நாத் தாமின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாகக் கூறினர்.
அத்தகைய நபர்களை அடையாளம் கண்டு, அந்த இடத்திற்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்று முன்மொழியப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத், பாஜக தலைவர்கள் பரபரப்பான கருத்துக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்று கூறினார்.
சார் தாம் யாத்திரை ஏப்ரல் 30 ஆம் திகதி அக்ஷய திருதியை அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, அப்போது கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆலயங்களின் கதவுகள் திறக்கப்படும்.
கேதார்நாத் ஆலயத்தின் வாயில்கள் மே 2 ஆம் திகதியும், பத்ரிநாத் ஆலயத்தின் வாயில்கள் மே 4 ஆம் திகதியும் திறக்கப்படும் நிலையில் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.