ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் எலோன் மஸ்க்கின் சர்ச்சைக்குரிய பங்கு குறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்ததால், அமெரிக்காவில் உள்ள ஒரு சேவை மையத்தில் பல டெஸ்லா வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
அதே நேரத்தில் கார் உரிமையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் ஒரு டாக்ஸிங் வலைத்தளத்தில் கசிந்தன.
லாஸ் வேகாஸில் அமைந்துள்ள டெஸ்லா சேவை மையத்தில் பல டெஸ்லா வாகனங்கள் செவ்வாய்க்கிழமை (18) தீக்கிரையாக்கப்பட்டன.
இது தவிர கன்சாஸில் மேலும் பல டெஸ்லா வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்த சம்பவத்தை பயங்கரவாதச் செயலாக அமெரிக்க புலனாய்வுப் பிரிவி விசாரித்து வருகிறது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
“இது டெஸ்லா வசதியின் மீது இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்” என்று லாஸ் வேகாஸ் காவல்துறையை மேற்கோள் காட்டி CNN செய்தி வெளியிட்டுள்ளது.
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், தீப்பிடித்த வாகனங்கள் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டு, சம்பவத்தை “பயங்கரவாதம்” என்று அழைத்தார்.
அரசாங்கத்தின் செயல்திறனை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய துறைகளில் வேலை வெட்டுக்களுக்கு எலோன் மஸ்க் அழுத்தம் கொடுத்ததற்காக அவர் எதிர்விளைவை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த சம்பவங்கள் வந்துள்ளன.
இந்த சம்பவங்கள் டெஸ்லாவின் நிதி நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளன, நிறுவனம் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக விற்பனை சரிவை எதிர்கொள்கிறது.
கடந்த வாரம், எலோன் மாஸ்க்கிற்கு ஆதரவளிக்கும் விதமாக ட்ரம்ப் ஒரு டெஸ்லா வாகனத்தை வாங்கினார்.
இதற்கிடையில், டெஸ்லாவின் துயரங்களை மேலும் அதிகரிக்கும் வகையில், ‘Dogequest’ என்ற டாக்ஸிங் வலைத்தளம், டெஸ்லா உரிமையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை கசியவிட்டதாக நியூயோர்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
இந்த தளம் அமெரிக்காவில் உள்ள டெஸ்லா உரிமையாளர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களை வெளிப்படுத்துகிறது.