செங்கடலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் மீதும் போர்க் கப்பல் மீதும் யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
கடந்த 48 மணி நேரத்தில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலைக் குறிவைத்து ஹூதிக்கள் மூன்றாவது தடவையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். வடக்கு செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஹாரி ட்ரூமன் எனும் விமானம் தாங்கிக் கப்பல் மீதே ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
செங்கடல் பகுதியில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் தாக்குதல் போர்க் கப்பல் மீதும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். காஸாவில் ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் இடம்பெறும் போரில், ஹுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர்.
அந்த வகையிலேயே, இந்தப் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் உள்ளிட்ட இரண்டு கப்பல்கள் மீது ஹுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காஸாவை இஸ்ரேல் தாக்கும் செயற்பாடு கைவிடப்படும் வரை, செங்கடலில் தங்கள் தாக்குதல் தொடரும் என்று ஹுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், செங்கடலில் ஹூதிக்களின் தாக்குதல் நிறுத்தப்படும் வரை, அவர்களுக்கு எதிராக அமெரிக்க தாக்குதல் நீடிக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு மத்தியில் யேமனில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 53 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர்களில் ஐந்து பேர் பெண்கள்; என்றும் 2 பேர் சிறுவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, இந்தத் தாக்குதலில் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க தாக்குதலின் பரபரப்பு அடங்கும் முன்னரே, செங்கடலில் ஹுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால், இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.