‘அல்சைமர் நோய்’ என்பது படிப்படியாக வளரும் நரம்பியல் சம்பந்தப்பட்ட ஒரு தீவிரநோய் ஆகும். இதை ‘மறதிநோய்’ என்றே நேரடியாக சொல்லலாம். இது மூளையிலுள்ள நரம்பு செல்கள் சேதமடைவதால் ஏற்படுவதாகும்.
நேற்று நடந்தது இன்று ஞாபகமில்லை. இன்று நடப்பது நாளை ஞாபகத்தில் இருக்காது என்ற நிலை ஒரு மனிதனுக்கு ஏற்பட்டால், அவனது வாழ்க்கையில் ஒரு பிடிப்பு எப்படி இருக்கும்? வாழவே பிடிக்காது.
இந்த ‘குறுகிய கால நினைவு இழப்பு நோய்’ நினைவை இழக்கச் செய்யும், சிந்தனையை மறக்கச் செய்யும். வயது கூடக்கூட இந்த நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருகிறது. உலகமெங்கும் சுமார் 3½ கோடி மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
மறதி என்பது குறைவான அளவில் எல்லோருக்குமே இருக்கக்கூடிய ஒரு பிரச்சினைதான். ஆனால் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பொருளை இங்கேதானே வைத்திருந்தேன் காணவில்லையே, நேற்று நான் அப்படி சொல்லவே இல்லையே, அந்த பேப்பரில் நான் கையெழுத்து போடவே இல்லையே, இப்படி தினமுமே முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவார், சொல்வார், செய்வார். இம்மாதிரி நபர்களுக்கு மதிப்பீடு என்றொரு சோதனையையும், அறியும் திறன் என்றொரு சோதனையையும் செய்து பார்த்தால் தெரிந்துவிடும்.
தூக்கம் வருவதில் சிக்கல், பேசுவதில் சிக்கல், ஒரே பேச்சை திரும்பத் திரும்ப சொல்லுவது, தன் குடும்பத்திலுள்ளவர்களின் பெயர்களையே மறந்துவிடுவது, தவறான நடத்தைகளில் ஈடுபடுவது, சித்தப்பிரமை என்று சொல்வார்களே அப்படி செயல்படுவது இன்னும் நிறைய வித்தியாசமான செயல்களை இவர்கள் தினமும் செய்வார்கள்.
இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் நல்ல ஆரோக்கியமான எல்லா சத்துக்களும் நிறைந்திருக்கக்கூடிய சரிவிகித சத்துணவாக தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். ஆரோக்கியமான, சத்தான உடலுக்கு தீங்கு விளைவிக்காத சமையல் எண்ணெய் வகைளை உபயோகிக்க வேண்டும். கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
தினமும் கண்டிப்பாக சிறிது நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி முதலிய ஏதாவதொன்றை தினமும் செய்ய வேண்டும். சிகரெட், மது உபயோகிப்பவர்களாக இருந்தால், அறவே தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
நல்ல உணவு, நல்ல உடற்பயிற்சி, தன்னை சுற்றி இருப்பவர்களுடன் நன்கு பேசிப் பழகுதல், மூளைக்கு வேலை இவைகளைத் தொடர்ந்து செய்து வந்தால் அல்சைமர் நோயின் பாதிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வெளியே வரலாம்.
சோம்பேறித்தனமாக எந்நேரமும் படுத்தே இருக்காமல் உடலுக்கு எப்பொழுதும் வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆரம்பத்திலேயே இந்நோயை கண்டுபிடித்துவிட்டால் தகுந்த சிகிச்சைகளை உடனடியாக ஆரம்பித்து நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம்.
பழைய விஷயங்கள் ஞாபகத்துக்கு வரவில்லையே என்று நினைத்து சலிப்படைந்து அதை அப்படியே விட்டுவிடக் கூடாது. இரவு நாம் படுக்கப் போவதற்குள் எப்படியும் அதை யோசித்து திரும்பத் திரும்பக் கொண்டுவந்து பழைய விஷயத்தை கண்டுபிடித்து விடவேண்டும்.