முதலமைச்சர், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை சுமார் 24% வரை உயர்த்தும் 3 மசோதாக்கள் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அமைச்சர்கள், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் 9 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
காங்கிரஸ் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் இந்த மசோக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு சுமார் 24 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் எம்.எல்.ஏ.க்களின் மாத சம்பளம் ரூ.55,000-த்தில் இருந்து ரூ.70,000 ஆகவும், தொகுதிப் படி ரூ.90,000-த்தில் இருந்து ரூ.1.20 லட்சமாகவும், அலுவலகப் படி ரூ.30,000-த்தில் இருந்து ரூ.90,000 ஆகவும் தினப்படி ரூ.1,800-த்தில் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.
முதலமைச்சரின் மாத சம்பளம் ரூ.95,000-த்தில் இருந்து ரூ.1.15 லட்சமாகவும், கேபினட் அமைச்சர்களின் சம்பளம் ரூ.80,000-த்தில் இருந்து ரூ.95,000 ஆகவும், அமைச்சர்களின் சம்பளம் ரூ.78,000-த்தில் இருந்து ரூ.92,000 ஆகவும் உயர்த்தப்படும்.
சபாநாயகரின் சம்பளம் ரூ.80,000த்தில் இருந்து ரூ.95,000 ஆகவும் துணை சபாநாயகரின் சம்பளம் ரூ.75,000-த்தில் இருந்து ரூ.92,000 ஆகவும் உயர்த்தப்படும்.
முதல் முறையாக எம்.எல்.ஏ.க்களாகப் பொறுப்பேற்பவர்களின் அடிப்படை ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.36,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது செலவு பணவீக்கக் குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் திருத்தப்படும். அதே சமயம் எம்.எல்.ஏ.க்களுக்கான தண்ணீர் மற்றும் மின்சார மானியம் திரும்பப் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.