பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக மேற்கண்ட பரிந்துரை வந்துள்ளது.
தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அமைதிக்கான நோபல் பரிசுக்கு இரண்டாவது முறையாக பரிந்துரைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பம் இதுவாகும்.
கடந்த டிசம்பரில் நிறுவப்பட்ட ஒரு குழுவான பாகிஸ்தான் உலக கூட்டணியின் (PWA) உறுப்பினர்கள், நாட்டில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான கானின் பணிக்காக அவரை பரிந்துரைப்பதாக அறிவித்தனர்.
2019 ஆம் ஆண்டில், இந்தியாவுடனான பதட்டங்களைத் தணிக்க இம்ரான் கான் மேற்கொண்ட முயற்சிகளுக்காக இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
மேலும், அவரது ஒப்புதல் தொடர்பான தீர்மானம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
2019 பெப்ரவரியில் பாலகோட் வான்வழித் தாக்குதலின் போது பாகிஸ்தான் எல்லைக்குள் அண்டை நாட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபோது சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனை விடுவிக்க கான் எடுத்த முடிவு, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பகைமையைத் தணித்ததாக அந்தத் தீர்மானம் கூறியது.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவரான இவர், பல வழக்குகளில் தண்டனை பெற்றதற்காக தற்போது பல சிறைத்தண்டனைகளை அனுபவித்து வருகிறார்.
இம்ரான் கான் 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2024 பெப்ரவரியில் பொதுத் தேர்தலுக்குப் பிறகு PTI மத்திய அரசாங்கத்துடன் முரண்பட்டு வருகிறது.
மேலும் நாட்டில் பலமுறை போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்த ஆண்டு ஜனவரியில், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்கில் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இம்ரான் கான் சிக்கிய பல வழக்குகளில், அரசு பரிசுகளை விற்பனை செய்தல், அரசு இரகசியங்களை கசியவிடுதல் மற்றும் சட்டவிரோத திருமணம் தொடர்பான மூன்று தண்டனைகள் நீதிமன்றங்களால் இரத்து செய்யப்பட்டன அல்லது இடைநிறுத்தப்பட்டன.