இந்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழைச் சேர்ந்த இரு மீனவர்கள் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து கடந்த 15ஆம் திகதி மீன் பிடிக்காகக் கடலுக்கு சென்ற இரு இலங்கை மீனவர்களும் படகின் இயந்திரம் பழுதடைந்தமையால் , இராமநாதபுரத்தை அண்டிய கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த வேளை தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் , இலங்கைக்கு இந்திய பிரதமர் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் .
அதனை அடுத்து புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 2 யாழ்ப்பாண மீனவர்களையும் இந்திய அரசாங்கம் விடுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த மீனவர்கள் இருவரும் மிக விரைவில் விமான மூலம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.