குஜராத் கடல் பகுதியில் கடத்தல் கும்பலால் வீசப்பட்ட இந்திய ரூ.1,800 கோடி மதிப்புள்ள 300 கிலோ போதைப் பொருளை கடலோர காவல் படை மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்) போலீஸார் கைப்பற்றினர். வெற்றிகரமான இந்த நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய கடலோர காவல் படை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக குஜராத் ஏடிஎஸ் பகிர்ந்து கொண்ட தகவலின் அடிப்படையில் கடலோர காவல் படையின் ஒரு கப்பல் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு சர்வதேச கடல் எல்லைப் பகுதிக்கு திருப்பி விடப்பட்டது. சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக ஒரு படகை கடலோர காவல் படை வெற்றிகரமாக அடையாளம் கண்டது. இந்நிலையில் படகில் இருந்தவர்கள் தங்களை கப்பல் நெருங்குவதை கண்டு படகில் இருந்த சரக்கை கடலில் வீசிவிட்டு சர்வதேச எல்லையை கடந்து தப்பிவிட்டனர்.
இதையடுத்து கடலில் வீசப்பட்ட சரக்கை கடலோர காவல் படை வீரர்கள் மீட்டு போர்பந்தர் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். பிறகு அதில் 300 கிலோவுக்கு மேல் போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது. இது மெத்தம்பேட்டமைன் என சந்தேகிக்கப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.1,800 கோடியாகும். பிறகு அந்த போதைப் பொருள் தொடர் விசாரணைக்காக ஏடிஎஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது.
கடலோர காவல் படையும் குஜராத் ஏடிஎஸ்ஸ{ம் இணைந்து சமீபத்திய ஆண்டுகளில் இதுபோன்று 13 நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளன. இவ்வாறு இந்திய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
அமித் ஷா பாராட்டு:
குஜராத்தை ஒட்டிய அரபிக் கடலில் பெருமளவு போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ள இத்தகவலை உள்துறை அமித் ஷாவும் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “போதைப்பொருள் இல்லாத பாரதத்தை கட்டியெழுப்புவதற்கான இடைவிடாத முயற்சியில், சர்வதேச கடல் எல்லைக்கு அருகே ரூ.1,800 கோடி மதிப்புள்ள 300 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, மகத்தான சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்பாட்டை வேரறுப்பதற்கான மோடி அரசின் அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி இதுவாகும். இந்த மகத்தான வெற்றிக்கு குஜராத் ஏடிஎஸ் மற்றும் கடலோர காவல் படைக்கு பாராட்டுகள்” என்று கூறியுள்ளார்.