2025 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் நேற்று (01) நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணி, ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணியை 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த வெற்றியுடன் ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான அணியானது புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 50 ஆவது போட்டியானது ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற RR அணியானது முதலில் துடுப்பெடுத்தாடுமாறு MI அணியை பணித்தது.
அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய MI அணியானது 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 217 ஓட்டங்களை பெற்றது.
மும்பை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரியான் ரிக்கல்டன் 61 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 53 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.
அதையடுத்து ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் தலா 48 ஓட்டங்களை பெற்றனர்.
பின்னர், 218 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய RR அணி, முந்தைய ஆட்டத்தில் சதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி முதல் ஓவரிலேயே ஓட்டம் எடுக்காமல் ஆட்டமிழந்ததால் ஆரம்பத்திலேயே அதிர்ச்சியடைந்தது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆக்ரோஷமாக பந்து வீசிய டிரென்ட் போல்ட்டின் பந்தில் இரண்டு அபார சிக்ஸர்களை விளாசினார்.
ஆனால் அவரும் விரைவாக ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன் பின்னர் வந்த RR வீரர்கள் சொப்ப ஓட்டங்களுடன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற, 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.
ஜோஃப்ரா ஆர்ச்சர் மாத்திரம் அதிகபடியாக 30 ஓட்டங்களை எடுத்தார்.
பந்து வீச்சில் MI அணி சார்பில் டிரெண்ட் போல்ட் மற்றும் கர்ண் சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும் அதிகபடியாக பெற்றனர்.
இந்த வெற்றியுடன் ஐந்து முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக ஆறாவது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
2017 ஆம் ஆண்டு ரோஹித் சர்மாவின் தலைமையில் மூன்றாவது முறையாக கிண்ணத்தை வென்ற பிறகு, தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று, எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மும்பை அணி நேற்றைய தினம் தனது சொந்த சாதனையை சமன் செய்தது.
இந்த சீசனில் அவர்கள் தங்கள் ஆரம்பப் போட்டிகளில் மிக மோசமான தொடக்கத்தையே கொண்டிருந்தனர்.
முதல் ஐந்து ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றனர்.
ஆனால், ஹர்த்திக் பாண்டியாவும் அவரது வீரர்களும் அதன் பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.