கல்கிஸ்ஸை – ஹுலுதாகொட பிரதேசத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கல்கிஸ்ஸை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹுலுதாகொட பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் இளைஞன் ஒருவன் சடலமாக கிடப்பதாக கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு நேற்றையதினம் தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு பின்னர் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் போதைப்பொருள் கடத்தல்காரரான “குடு அஞ்சு” என்பவரின் உதவியாளர் ஒருவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், இந்த கொலை சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் நேற்றையதினம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கொலை சம்பவத்துக்கு உதவி செய்ததாக கூறப்படும் மேலும் ஒரு சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கல்கிஸ்ஸை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.