பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று புறக்கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
இதன்படி, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பூஸ்ஸ சிறையில் உள்ள இரு சந்தேக நபர்களிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கு அந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவிடமிருந்து உத்தரவு ஒன்றை பெற்றுள்ளது.
தேசபந்து தென்னகோனுக்கு பாதாள உலகக்குழுத் தலைவர் கஞ்சிப்பாணி இம்ரானிடமிருந்து அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என இரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், அவரது ஹோகந்தரவில் உள்ள வீட்டிற்குச் சென்று அவருக்கு அறிவித்திருந்தனர்.
வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் கஞ்சிப்பாணி இம்ரான், தென்னகோனை படுகொலை செய்யுமாறு தனது நெருங்கியவர்களுக்கு அறிவுறுத்தியதாக தகவல்கள் பதிவாகியுள்ளதாகவும், அந்த அதிகாரிகள் மேலும் அங்கு குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.