2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (02) நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியானது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை எதிர்கொள்ளவுள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 51 ஆவது போட்டியானது இன்றிரவு 07.30 மணிக்கு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பமாகிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியிடம் தனது கடைசி ஆட்டத்தில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அவர்கள் விளையாடிய ஒன்பது போட்டிகளில், ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று மூன்றில் தோல்வியடைந்துள்ளனர்.
புள்ளிப் பட்டியலில் அவர்கள் நான்காவது இடத்தில் உள்ளனர்.
மறுபுறம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தங்கள் முந்தைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்த சீசனில் இதுவரை மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று ஆறு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
புள்ளிப் பட்டியலில் அவர்கள் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர்.
சீசனில் பின்னடைவு இருந்தபோதிலும், குஜராத் அணி பிளேஆஃப் பந்தயத்தில் நல்ல நிலையில் உள்ளது.
மேலும் சொந்த மண்ணில் ஒரு முக்கியமான வெற்றியை இலக்காகக் கொண்டு மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும் நோக்குடன் இந்த ஆட்டத்தில் களம் காணுகின்றது.
மறுபுறம், ஹைதராபாத் அணி, சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான வெற்றியின் மூலம் தனது தோல்விப் பயணத்தை முறியடித்தது.
பிளேஆஃப்களுக்கான அவர்களின் பாதை இன்னும் கடினமாகவே உள்ளது.
ஆனால், ஏனைய அனைத்து போட்டிகளிலும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து அடுத்த சுற்றுக்கான தங்கள் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்க முயற்சிக்கின்றது.