கசிப்பும் பணமும் கொடுத்து தமிழ் அரசுக் கட்சி வாக்கு சேகரித்து என்பதை அமைச்சர் பிமல் ரட்நாயக்க நாடாளுமன்றுக்கு வெளியில் வந்து ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சலுகைகளுக்காக வாக்களிப்பவர்கள் தமிழ் மக்கள் என்று இதுவரை காலமும் பிழையான எண்ணத்தை அவர் கொண்டுள்ளார் என்றும் சுமந்திரன், பிமல் ரட்நாயக்கவை சாடியுள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த பிமல் ரட்நாயக்க, இலங்கை தமிழ் அரசுக் கட்சி கசிப்பும் பணமும் வழங்கியே தேர்தலில் அதிகளவு வாக்குகளை பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளளருமான எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை தமிழ் அரசுக் கட்சி சாத்வீகக் கட்சி மாத்திரமில்லாது சமூக அக்கறையுள்ள கட்சியுமாகும் எனவும் மது ஒழிப்புக்காக பல விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் தமது கட்சி முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.