அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பரம் விதித்துள்ள இறக்குமதி வரிகளை 10% அளவுக்கு 90 நாட்களுக்குக் குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்டதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் சீன அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட், “இரு தரப்பும் உயர்த்தப்பட்ட வரிகளை 90 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளன. 100%த்துக்கு மேல் விதிக்கப்பட்ட வரி விகிதங்கள் 10% ஆக இருக்கும்.
இரு நாடுகளும் தங்கள் தேசிய நலனை மிகச் சிறப்பாகப் பிரதிநிதித்துவப்படுத்தின. நாங்கள் இருவரும் வர்த்தக சமநிலையை ஏற்படுத்த ஆர்வமாக உள்ளோம், அமெரிக்கா அதை நோக்கி தொடர்ந்து நகரும். இரு தரப்பும் தங்களுக்கு இடையேயான வர்த்தக வேறுபாடுகளை குறைப்பதில் அடைந்துள்ள முன்னேற்றம் பாராட்டுக்குரியது.” என தெரிவித்தார்.
கடந்த ஜனவரியில் மீண்டும் ஆட்சிக்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உலகளாவிய வரித் தாக்குதலைத் தொடங்கினார். குறிப்பாக, சீனா மீது அதிக வரிகளை விதித்தார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து பதிலுக்கு அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. இதில், இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போட்டி காரணமாக அமெரிக்கா விதித்த இறக்குமதி வரி 144% அளவுக்கும், சீனா விதித்த இறக்குமதி வரி 125% அளவுக்கும் சென்றன.
உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான இந்த வர்த்தக மோதல், உலகளாவிய பொருளாதாரக் கண்ணோட்டத்தை சீர்குலைத்து நிதிச் சந்தைகளை பதம் பார்த்தது. இருவழி வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 600 பில்லியன் டொலர் மதிப்பிலான வர்த்தகத்தை இது ஸ்தம்பிக்க வைத்தது. விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து, தேக்கநிலை குறித்த அச்சங்களைத் தூண்டியது. அதோடு, சில துறைகளில் ஆட்குறைப்புக்கும் இது வழி வகுத்தது. இந்த வர்த்தகப் போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகளை நிதிச் சந்தைகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.
இந்நிலையில், மூத்த அமெரிக்க மற்றும் சீன பொருளாதார அதிகாரிகளுக்கு இடையேயான முதல் நேருக்கு நேர் சந்திப்பு ஜெனிவாவில் நடைபெற்றது. இதில், இரு நாடுகளும் தங்கள் பரஸ்பர வரி உயர்வை 10% ஆக குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன. இதையடுத்து, திங்களன்று (மே 12, 2025) வொல் ஸ்ட்ரீட் பங்குகள் உயர்ந்தன. டொலர் மீதான நம்பிக்கை முதலீட்டாளர்களுக்கு உறுதியாகியது. இந்த பேச்சுவார்த்தைகள் உலகளாவிய மந்தநிலையைத் தவிர்க்கலாம் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளன.