நேஷனல் ஹெரால்ட் பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் குற்ற வருமானமாக 142 கோடி இந்திய ரூபாவை பெற்றதாக அமுலாக்க இயக்குநரகம் (ED) இன்று டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டுமா என்பது குறித்த முதற்கட்ட சமர்ப்பிப்புகளின் போது, அமுலாக்கத்துறை சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு இந்த அறிக்கையை வெளியிட்டார்.
2014 ஜூன் 26 அன்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஒரு தனிப்பட்ட முறைப்பாட்டை பதிவு செய்ததைத் தொடர்ந்து, இது தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் நீண்டகாலமாகத் தொடங்கின.
சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டுகளை நீதிவான் நீதிமன்றம் கவனத்தில் கொண்ட பின்னர், 2021 இல் அமுலாக்கத் துறை முறையாக தனது விசாரணையைத் தொடங்கியது.
இன்று நடந்த விசாரணையில், வழக்கில் முக்கிய முறைப்பாட்டாளராக இருக்கும் சுவாமிக்கு குற்றப்பத்திரிகையின் நகலை வழங்குமாறு நீதிபதி கோக்னே அமுலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையில், சோனியா மற்றும் ராகுல் காந்தியின் சட்டப் பிரதிநிதிகள், ED-யின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக தங்கள் சமர்ப்பிப்புகளைத் தயாரிக்க அவகாசம் அளிக்கப்பட்டது.
நேஷனல் ஹெரால்டு வழக்கின் பின்னணி
நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை ராகுல் காந்தியின் கொள்ளுத் தாத்தாவும் இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவால் 1938 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
1937ஆம் ஆண்டில் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏ.ஜே.எல்.) என்ற நிறுவனத்தின் சார்பில் இந்த பத்திரிகை வெளியிடப்பட்டு வந்தது.
ஏ.ஜே.எல். நிறுவனத்தில் 5,000க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர்.
இந்நிறுவனத்தின் மூலம் உருது மொழியில் குவாமி ஆவாஸ் (Qaumi Awaz) என்ற பத்திரிகையும் இந்தி மொழியில் நவ்ஜீவன் என்ற தினசரி பத்திரிகையும் தொடங்கப்பட்டது.
அந்த காலத்தின் மிகவும் செல்வாக்குமிக்க தலைவர்களால் வடிவமைக்கப்பட்ட நேஷனல் ஹெரால்ட், இந்திய சுதந்திரப் போராட்டத்தால் அடையாளப்படுத்தப்பட்டது.
இதன்மூலம் இந்தியாவின் சிறந்த தேசியவாத பத்திரிகை என்ற புகழை அடைந்தது நேஷனல் ஹெரால்ட்.
நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் கடுமையான மற்றும் கூர்மையான தலையங்க பாணி மற்றும் நேருவின் கடும் வார்த்தைகளைக் கொண்ட பத்திகள் காரணமாக, பிரித்தானிய அரசாங்கம் அப்பத்திரிகையை 1942 ஆம் ஆண்டில் தடை செய்தது.
இதனால், அந்த தினசரி பத்திரிகை தற்காலிகமாக செயல்பட முடியாத நிலைமை ஏற்பட்டது.
அதன்பின் மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் அப்பத்திரிகை செயல்படத் தொடங்கியது.
1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்று, நாட்டின் பிரதமராக நேரு பதவியேற்றபின்னர், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் இயக்குனர் குழு தலைவர் பொறுப்பை அவர் இராஜினாமா செய்தார்.
ஆனால், அப்பத்திரிகையின் கொள்கையை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகிப்பதில் காங்கிரஸ் தொடர்ந்து செயலாற்றி வந்தது. 1963ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தில் அப்பத்திரிகை குறித்து ஜவஹர்லால் நேரு பேசுகையில், “பொதுவாக காங்கிரஸ் கொள்கையை ஆதரிக்கும் அதேவேளையில் சுயாதீனமான கண்ணோட்டத்தை நேஷனல் ஹெரால்டு பேணுகிறது” என்று பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் நிதியின் மூலமாக செயல்பட்ட போதும், இந்தியாவின் சிறந்த பத்திரிகையாளர்களின் அரவணைப்பின் மூலம், முன்னணி ஆங்கில செய்தித்தாளாக உருவெடுத்தது.
ஆனால், 2008 ஆம் ஆண்டில் பொருளாதார காரணங்களுக்காக மீண்டும் அப்பத்திரிகை நிறுத்தப்பட்டது. 2016ஆம் ஆண்டில் அப்பத்திரிகை இணைய பதிப்பாக மீண்டும் தொடங்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன?
பாஜகவின் சுப்பிரமணிய சுவாமியால் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு எதிரான இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இருவரும் காங்கிரஸ் கட்சி நிதியை பயன்படுத்தி, ஏ.ஜே.எல். நிறுவனத்தை கைப்பற்றி அதன் 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை அடையும் நோக்கில் செயல்பட்டதாக, சுப்பிரமணிய சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.
2008 ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்ட் மூடப்பட்டபோது, காங்கிரஸ் கட்சிக்கு ஏ.ஜே.எல். நிறுவனம் 90 கோடி ரூபாய் கடன்பட்டிருந்தது.
2010 ஆம் ஆண்டில், சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற லாப நோக்கற்ற நிறுவனத்திற்கு காங்கிரஸ் இந்த கடனை வழங்கியது. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் அந்நிறுவனத்தின் இயக்குனர் குழு உறுப்பினர்களாக இருந்தனர். அந்நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை இருவரும் கொண்டிருந்தனர்.
மீதமுள்ள 24% பங்குகள், காங்கிரஸ் தலைவர்களான மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், பத்திரிகையாளர் சுமன் துபே, தொழிலதிபர் சாம் பிட்ரோடா ஆகியோர் கொண்டிருந்தனர். அவர்களுடைய பெயர்களும் இந்த வழக்கில் இடம்பெற்றுள்ளது.