இலங்கைப் பிரஜைகள் தமது சாரதி அனுமதிப்பத்திரங்களை வெளிநாடுகளில், குறிப்பாக இத்தாலி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தும் போது எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (20) நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திர மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கௌரவ பிரசன்ன குணசேன ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
மேலும், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பிய பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணரத்ன மற்றும் இரு அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது, ஒழுங்கற்ற ஓட்டுநர் உரிம வடிவங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையிலான இணக்கமற்ற தரநிலைகள் காரணமாக உருவாகும் சிக்கல்கள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் சர்வதேசமாக ஏற்றுக்கொள்ளப்படும் தரங்களுக்கு ஏற்ற வகையில் ஒரு துல்லியமான, தரப்படுத்தப்பட்ட உரிம வடிவமைப்பின் தேவை வலியுறுத்தப்பட்டதோடு, இலங்கையின் தற்போதைய உரிம முறையை நவீனமயமாக்கி, டிஜிட்டல் மயமாக்கும் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுபவர்கள் எதிர்நோக்கும் நடைமுறை தடைகள், அந்தந்த நாடுகளின் விதிமுறைகளுடன் ஏற்படும் முரண்பாடுகள், மற்றும் அதற்கான தீர்வுகளாக இணக்கத்தை மேம்படுத்துதல், டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவித்தல் ஆகியவை பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது இலங்கைப் பிரஜைகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், உலகளாவிய தரங்களை பூர்த்தி செய்யக்கூடிய, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஓட்டுநர் அனுமதிப்பத்திரங்களை வடிவமைக்கும் முயற்சிக்கு அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படும் என பிரதி அமைச்சர் வலியுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.