பிரபல தொழிலதிபரும் Tesla மற்றும் SpaceX நிறுவனங்களின் தலைவருமான எலோன் மஸ்க் (Elon Musk) அரசியல் நன்கொடைகள் மற்றும் பரப்புரை செலவுகளை குறைத்து, தொழில்துறையில் மீண்டும் முழுமையாக கவனம் செலுத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.
Qatar Economic Forum நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ”தான் அரசியலில் தேவையான அளவு பங்களிப்பை செய்து விட்டதாகவும், இனிமேல் அரசியலில் அதிகமாக ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை” எனவும் தெரிவித்துள்ளார்.
எலோன் மஸ்க் கடந்த ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பிரச்சார நடவடிக்கைகளுக்காக $290 மில்லியனுக்கும் மேல் நன்கொடை அளித்திருந்தார். இந்த நன்கொடைகள் பெரும்பாலும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பதவியேற்றதையடுத்து எலோன் மஸ்க் அமெரிக்காவின் Department of Government Efficiency – DOGE அமைப்பில் முக்கிய ஆலோசகராகப் பணியாற்றியிருந்தார்.
எவ்வாறு இருப்பினும் எலோன் மஸ்கின் அரசியல் விஜயம் காரணமாக அவரது தனிப்பட்ட தொழில்துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையிலேயே எலோன் மஸ்க், அரசியல் நன்கொடைகள் மற்றும் பரப்புரை செலவுகளை குறைத்து, தொழில்துறையில் மீண்டும் முழுமையாக கவனம் செலுத்துவதாக அறிவித்துள்ளார்.
எலோன் மஸ்கின் குறித்த அறிவிப்பானது உலகளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.