துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் உட்பட பொருட்களை கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் நடந்த கொள்ளைச் சம்பவங்களுடன் அவர் தொடர்புடையவர் என்பதும், கொள்ளையிடப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 100 கோடி ரூபாய் எனவும் சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் திகதி தொம்பே பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சந்தேக நபர்கள், தங்க நகை அடகு கடைக்குள் நுழைந்து, அங்கிருந்தவர்களை துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி, சுமார் 65 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் சந்தேக நபர்களைக் தேடி விசாரணைகளைத் தொடங்கி நிலையில் அவர்கள் கடந்த 22ஆம் திகதி கைது செய்யப்பட்டு இன்று (25) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.














