2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (29) நடைபெற்ற போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை வீழ்த்தியது.
ஐ.பி.எல். வரலாற்றில் நான்காவது முறையாக RCB அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சந்தர்ப்பம் இதுவாகும்.
2008 ஆம் ஆண்டு லீக் தொடங்கப்பட்டதிலிருந்து மூன்று முறை (2009, 2011, 2016) ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போதிலும், இன்னும் கிண்ணத்தை வெல்லாத RCB அணி, தொடக்க வீரர் பில் சால்ட்டின் அதிரடியான அரைசதத்தால் 10 ஓவர்களில் சிறிய இலக்கை எட்டிப்பிடித்தது.
சண்டிகர், முல்லன்பூரில் அமைந்துள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரஜத் பட்டிதர் தலைமையிலான அணியானது பந்து வீச்சினை மேற்கொள்ளத் தீர்மானித்தது.
அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான PBKS அணியானது 14.1 ஓவர்களில் 101 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

PBKS அணி சார்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிகபட்சமாக 26 ஓட்டங்களை எடுத்தார்.
RCB சார்பில் பந்து வீச்சில் இளம் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுயாஷ் சர்மா மூன்று விக்கெட்டுகளை (3/17) வீழ்த்தி அணிக்கு நட்சத்திர வீரராக மாறினார்.
அவர் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோஷ் ஹேசில்வுட் (3/21), யாஷ் தயாள் (2/26) மற்றும் புவனேஷ்வர் குமார் (1/17) ஆகியோரும் அணியின் வெற்றிக்கு உதவினர்.
அதேநேரம், பஞ்சாப் கிங்ஸ் அணி ஐ.பி.எல். பிளேஆஃப் சுற்று வரலாற்றில் இரண்டாவது மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்து மோசமான சாதனையை இந்த ஆட்டத்தில் படைத்தது.
இதற்கு முன்னர் மும்பை, வான்கடே மைதாத்தில் 2008 ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். பிளேஆஃப் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக டெக்கான் சார்ஜஸ் 87 ஓட்டங்களை பெற்றிருந்தது.
எவ்வாறெனினும் 102 என்ற இலகுவான வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய RCB அணியானது 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை கடந்தது.
அற்பமான இந்த போட்டியில், பில் சால்ட் 27 பந்துகளில் 56 ஓட்டங்களை எடுத்து RCB அணிக்கு எளிதான வெற்றியைப் பெற்றுத் தந்தனர்.

இந்த வெற்றியின் மூலமாக RCB அணி நேரடியாக ஜூன் 3 ஆம் திகதி அகமதாபாத்தில் நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
அதேநேரம், தோல்வியை தழுவிய PBKS அணி இன்று நடைபெறும் வெளியேற்றல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் இறுதிப் போட்டிக்கான பந்தயத்துக்காக ஜூன் 01 ஆம் திகதி நடைபெறும் குவாலிஃபையர் 2 போட்டியில் களம் காணும்.




















