2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (30) நடைபெறும் வெளியேற்றல் (Eliminator) சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி மும்பை இந்தியன்ஸ் அணியை (MI) எதிர்கொள்கிறது.
இந்தப் போட்டியானது இன்றிரவு 07.30 மணிக்கு முல்லன்பூரில் அமைந்துள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகும்.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, குவாலிஃபையர் 2-க்கு தகுதி பெறும்.
அங்கு அவ்கள் இறுதிப் போட்டிக்காக பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்வார்கள்.
இந்த ஆட்டம் ஜூன் 01 ஆம் திகதி அகமதாபாத்தில் நடைபெறும்.
ஷுப்மான் கில் தலைமையிலான GT அணி, லீக் கட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் என்று இருந்தது.
எனினும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிகளுக்கு எதிரான கடைசி இரண்டு லீக் நிலை போட்டிகளில் தோல்வியடைந்ததால் குஜராத் டைட்டன்ஸ் மூன்றாவது இடத்திற்கு சரிந்தது.
இறுதியாக GT 14 போட்டிகளில் 18 புள்ளிகளுடன் லீக் கட்டத்தை முடித்தது.
மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்த பின்னர் மீண்டும் தனது பாதையை மாற்றியது.
பின்னர் ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணி தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று வலுவான நிலையில் இருந்தது.
ஐந்து முறை சாம்பியனான MI அணி, வான்கடே மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி பிளேஆஃப்களில் இடம் பிடித்தது.
எனினும், ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸிடம் அவர்கள் தோல்வியடைந்தது, புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்ததுடன், வெளியேற்றல் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
ஐ.பி.எல். வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஏழு முறை மோதியுள்ளன.
இந்த ஏழு போட்டிகளில், குஜராத் ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளது.
அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது.
இதேவேளை, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆதிக்க வெற்றிக்குப் பின்னர் நடப்பு ஐ.பி.எல். சீசனில் இறுதிப் போட்டியை எட்டிய முதல் அணியாக RCB ஆனமையும் குறிப்பிடத்தக்கது.