தமது குறுஞ்செய்தி (SMS) அமைப்பை குறிவைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதலின் விளைவாக எந்த தரவும் திருடப்படவில்லை என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
அதன் தரவு அமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தற்போது ஒரு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அதன் மேலதிக பொது முகாமையாளர் பிரதீப் ஹேரத் குறிப்பிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை (01), அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையின் வலைத்தளத்திற்கு அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெற முயன்றதாகக் கூறப்படுகிறது.
இந்த முயற்சியின் போது, அந்த நபர் SMS அமைப்பை அணுகி வாடிக்கையாளர்களுக்கு செய்திகளை அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த நபர் வாடிக்கையாளர்களின் மொபைல் தொலைபேசிகளுக்கு சுமார் 10,000 குறுஞ் செய்திகளை அனுப்பியுள்ளார்.
அந்த செய்திகள், வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தரவை மீட்டெடுப்பதற்காக பணம் செலுத்துமாறு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை SMS சேவையை மீட்டெடுக்க உடனடியாக நடவடிக்கை எடுத்து, மோசடி செய்திகள் குறித்து பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தகவல் அளித்துள்ளது.
இதற்கிடையில், அரசாங்க வலைத்தளங்களின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணி நேர செயல்பாட்டு அமைப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) கூறுகிறது.
அதன் மூத்த தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருகா தமுனுபொல, வலைத்தளங்களின் பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள பாதிப்புகள் சைபர் தாக்குதலுக்கு வழிவகுத்திருக்கலாம் என்று கூறினார்.