தமிழ் நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசனை கர்நாடக மேல் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.
தனது அடுத்த திரைப்படமான தக் லைஃப்பை கர்நாடகாவில் வெளியீடுவதற்கும் திரையிடல் செய்வதையும் உறுதி செய்ய உத்தரவிடக் கோரி கமல்ஹாசன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, கர்நாடக மேல் நீதிமன்றம் அவரை கடுமையாக விமர்சித்தது.
இதன்போது, கமல்ஹாசன் தனது அறிக்கைக்கு மன்னிப்பு கேட்க மறுத்தது குறித்து நீதிபதி எம். நாகபிரசன்னா கேள்வி எழுப்பினார்.
அத்துடன், அவரது கருத்துக்கள் பொதுமக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எந்தவொரு குடிமகனுக்கும் உணர்வுகளைப் புண்படுத்த உரிமை இல்லை என்று கூறிய நீதிபதி, “நீர், நிலம் மற்றும் மொழி – குடிமக்களுக்கு முக்கியம்.
எனவே, பேச்சுரிமையைப் பயன்படுத்தி உணர்வுகளைப் புண்படுத்தாதீர்கள் என்றும் நீதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
“கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது” என்ற கமல் ஹாசனின் அண்மைய சர்ச்சைக்குரிய கருத்துக்கு பரவலான எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தக் கருத்து கர்நாடகா முழுவதும் அரசியல் தலைவர்களிடமிருந்து விமர்சனங்களையும், கன்னட ஆதரவு குழுக்களின் போராட்டங்களையும் தூண்டியது.